கோவில் அருகே தள்ளுவண்டியில் பீப் பிரியாணி விற்பனை செய்த வியாபாரிக்கு மிரட்டல். பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு.

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா ரவிக்குமார் என்பவர் தள்ளு வண்டிகடைகளில் பீப் மற்றும் மாட்டு இறைச்சிஉணவுகளை விற்பனை செய்து வருகிறார்.. இந்த நிலையில் அங்கு வந்த பாஜக நிர்வாகியான சுப்பிரமணி ( வயது 36 )இங்கு கோவில் உள்ளது. எனவே இந்த இடத்தில் பீப் பிரியாணி விற்பனை செய்யக் கூடாது என்று கூறி மிரட்டினாராம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கிடையே பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் தள்ளுவண்டி வியாபாரியை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து மனு கொடுத்தனர் .அது போன்று ஆபிதா ரவிக்குமார் சார்பில் துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் போலீசார் பாஜக நிர்வாகி சுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று இரவு உடையாம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் துடியலூர் – கணபதி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்தது கோவை வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் போலீசரரிடம் எங்கள் ஊர் அம்மன் கோவில் அருகே பீப் பிரியாணி வியாபாரம் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் சென்று சற்று தள்ளி விற்பனை செய்யும்படி தெரிவித்தோம். இதற்கு கடை உரிமையாளர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவரது மனைவி ஆபிதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களுடன் தகராறு செய்ததுடன் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.