தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.
இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாத இறுதி தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தை விட அதன் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த ஊதிய முரண்பாட்டை நீக்க கோரி நீண்ட நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்பொழுது தமிழகத்தில் உள்ள 20% இடைநிலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளனர். இதுவரை அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.