குளிர்சாதன பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கு கரோனா பெருந்தொற்று அச்சமா காரணமாக படுக்கை விரிப்புகள் வழங்க தடை இருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே அதனை தளர்த்தி வழங்குவதற்கு தீவிரம் காட்டி வருகிறது.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகும் குளிர்சாதன பெட்டிகளில் படுக்கை விரிப்புகள், தலையணை, கம்பளி போர்வை போன்றவை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தன. கடந்த இரண்டு வருடங்களாக படுக்கை விரிப்புகள், கம்பளிப் போர்வைகள் போன்றவை உபயோகப்படுத்தப்படாமல் இருக்கிறது.
அவை பயன்படுத்தும் நிலையில் உள்ளதா அல்லது அதனுடைய பயன்படுத்தும் காலக்கெடு முடிவு பெற்று விட்டதா என்பது ஒருபக்கம் ஆராயப்படுகிறது. மேலும் பயணிகளுக்கு தூய்மையான சுகாதாரமான படுக்கை விரிப்புகள் வழங்க புதிய கொள்முதலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை பசுமலையில் உள்ள ரயில்வே சலவையகத்தில் நவீன சலவை இயந்திரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே அவற்றை பழுது நீக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்றுக்கு முன்பு உள்ளது போல அனைத்து ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகள் விரைவில் வழங்க ரயில்வே நிர்வாகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலைக்கு வந்தவுடன் ரயில்களில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் செய்தி அறிவிக்கப்படும் என மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.