டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவிய நிலையில், இந்தியப் பெருங்கடலில் வட்டமடித்துக்கொண்டு இருந்த சீனாவின் உளவுக் கப்பல் திடீரென வெளியேறி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அந்த உளவுக் கப்பலின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் பணியிலும் ராணுவம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 9-ம் தேதி அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக்கட்டை, ஹாக்கி மட்டை, இரும்பு ராடு சகிதமாக நுழைந்த 300 சீனப் படையினரை, வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து விரட்டி அடித்துள்ளனர். கடந்த 2020-இல் லடாக்கில் பெரும் ஆராவாரத்துடன் நுழைந்து, பின்னர் இந்திய ராணுவத்தினருடன் சண்டையிட முடியாமல் ஓடியதை போல இந்த முறையும் சீன ராணுவத்தினர் பின்வாங்கியுள்ளனர்.
இப்போது சீனப் படையினர் பின்வாங்கி இருந்தாலும் நிச்சயம் அவர்கள் திரும்ப வருவார்கள் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் தீவிர கண்காணிப்பில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்தியப் பெருங்கடலில் மீண்டும் சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் 5 வந்து சென்றிருக்கிறது.
சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. இந்த துறைமுகமானது ஆந்திரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடல் எல்லைகள் அருகே அமைந்துள்ளது. எனவே, இந்த உளவுக் கப்பல் மூலமாக இந்த மூன்று மாநிலங்களில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை கண்காணிக்கவும், முக்கிய தகவல்களை திரட்டவும் முடியும் என்பதால் யுவான் வாங் 5 கப்பல் அங்கு நிறுத்தப்படுவதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தக் கப்பல் அங்கு 4 நாட்கள் நிறுத்தப்பட்டு பின்னரே கொண்டு செல்லப்பட்டது.
இந்த சூழலில், தற்போது மீண்டும் அதே கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வந்து சென்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதற்கு முன்னதாக இந்த உளவுக் கப்பல் வந்து சென்றிருக்கிறது. நேற்று வரை இருந்த அந்த கப்பல் நேற்று இரவோடு இரவாக வெளியேறி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பிராநதியத்தில் தாக்குதல் நடத்தப்படும் போது, தென் பகுதிக்குள் சீனா ஏன் உளவுக் கப்பலை அனுப்பியது? என இந்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.