உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஒரு மாதம் கடந்துள்ளது. இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையை கடைபிடித்து வருகிறது.
இதன் காரணமாக, ரஷிய ரூபிள்லேயே வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷியா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் குறித்து இந்தியா ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசுவதற்காக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதற்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்தியாவின் இந்த போக்கு, அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகள் விதித்த பொருளாதார தடைகளை வலிவற்றதாக ஆக்குகிறது என விமரிசனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ செய்தியாளரிடம் பேசுகையில், “வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டிய நேரமிது. அமெரிக்கா மற்றும் அதன் பிற கூட்டணி நாடுகளுடன் நிற்க வேண்டிய நேரமிது. உக்ரேனிய மக்களுடன் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மைக்காக நிற்க வேண்டிய நேரம் இது. இந்தியாவின் செயல் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.
இந்தியாவின் நிலைபாடு குறித்து பேசிய ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் டான் டெஹ், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாங்கள் கொண்டிருந்த விதிகள் அடிப்படையிலான அணுகுமுறையை வைத்திருக்க ஜனநாயகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்” என்றார்.
குவாட் கூட்டமைப்பில் இந்தியா எடுத்துவரும் நடவடிக்கையின் காரணமாக சக உறுப்பு நாடுகள் அதிருப்தியில் இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட்டுவரும் குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளன.
ரஷியாவிடமிருந்து அதிகம் ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், ரஷியாவிடமிருந்து எண்ணெயை குறைந்த விலையில் வாங்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.