உலக சராசரியைவிட இந்தியாவின் பால் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதி மையம் சார்பில் நடத்தப்படும் சர்வதேச பால் கூட்டமைப்பின் உலக மாநாடு இன்று கிரேட்டல் நொய்டாவில் தொடங்கியது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கடைசியாக கடந்த 1974ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது. அதன்பின் இப்போது நடக்கிறது.
உலகில் உள்ள முக்கிய பிரதிநிதிகள், மதிப்புக்குரியவர்கள் இந்தியாவில் இங்கு வந்து குழுமியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரின் சிந்தனைகளையும், புத்தாக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இந்த மாநாடு சிறந்த இடம்.
பால்வளத்துறை கிராமப்புறப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் பசு தானம் மற்றும் பால் தொடர்பான வியாபாரம் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. இந்திய பால் உற்பத்தி துறை என்பது மிகப்பெரியது. மிகப்பெரிய அளவில் மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த துறையின் மூலம் 8 கோடி மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
இந்தியாவில் செயல்படும் பால்கூட்டுறவு மாதிரி சங்கங்களை உலகில் எந்த நாட்டிலும் காணமுடியாது. இந்த பண்ணைகள் 2 நாட்களுக்கு ஒருமுறை 2 லட்சம் கிராமங்களில் உள்ள 2 கோடி விவசாயிகளிடம் இருந்து தினசரி இருவேளை பால் கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இதில் இடைத்தரகர்கள் யாரும் இல்லை. 70 சதவீத தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு நேரடியாக விவசாயிகளுக்குச் செல்கிறது. உலகில் எந்த நாட்டிலும் இந்த நியாயமான செயல்முறை இல்லை.
இந்திய பால் உற்பத்தி துறையில் 70 சதவீதம் பெண்களின் பங்கு இருக்கிறது.இந்திய பால்உற்பத்தி துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான். இந்தியாவில் பால்கூட்டுறவில் உறுப்பினராகஇருக்கும் மூன்றில் ஒருவர் பெண். அரிசி, கோதுமையின் உற்பத்தி மதிப்பைவிட பால் உற்பத்தி மதிப்பு அதிகரித்து ரூ.8.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
உலகின் பால் உற்பத்தி சராசரியைவிட 3 மடங்கு அதிகமாக இந்தியாவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்துமே பெண்களின் சக்திதான்
மாடுகளுக்கு அடிக்கடி வரும் நோயால் விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் வருமானம் பாதிக்கிறது, பால் உற்பத்தியும் பாதிக்கிறது. ஆதலால், மாடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தும் முறையை அரசு கொண்டு வர உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் மாடுகளுக்கு கால் மற்றும் வாய்பகுதியில் உருவாகும் ப்ரூசெலோசிஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி 100சதவீதம் செலுத்தப்படும். இந்த நோயிலிருந்து முழுவதுமாக விடுபட இலக்கு வைத்துள்ளோம் . இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்