சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஷன் பிரம்பா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விக்ரம் எஸ் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வானத்தை அலங்கரித்துள்ள விக்ரம் எஸ், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
விக்ரம் எஸ் ராக்கெட், ஆந்திர பிரதேசத்தை அடிப்படையாக கொண்ட என் ஸ்பேஸ் டெக் இந்தியா, சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் மற்றும் ஆர்மேனியன் பஸூம் க்யூ ஸ்பேஸ் ரிசர்ச் லேப் ஆகியவைகளின் மூன்று பேலோடுகளை தாங்கிச்செல்கிறது.
முன்னதாக விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தல் பணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. அந்தவகையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் ஸ்கைரூட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட் டுள்ளன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதில் சிறியரக 545 கிலோ எடை கொண்ட ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. அதன்படி கடந்த 15-ம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில் மோசமான வானிலையால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பருவச்சூழல் சாதகமாக இருப்பதால் விக்ரம் எஸ் ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று(நவ.18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விக்ரம் எஸ் ராக்கெட் 6 மீட்டர் உயரம் கொண்டது. ஒரே நிலையை கொண்ட இது அதிகபட்சமாக 80 முதல் 100 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இந்த ராக்கெட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் அனுப்பப்படுகின்றன. அவை அனைத்தும் புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து பல்வேறு தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.