அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களுக்கு நெற்றியில் திலகமிட அனுமதி.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சீருடையில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிவதற்கு அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. அதாவது, இந்தியாவை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் அமெரிக்காவின் விமானப் படையில், வயோமிங் என்ற பகுதியில் உள்ள ஃஎப்இ வாரன் விமான படைத் தளத்தில் விமான படை வீரராக பணியாற்றி வருகிறார்.
தர்ஷன் ஷா பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிந்து கொள்ள அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. மதரீதியான விலக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து தர்ஷன் ஷா கூறுகையில், “நான் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். திலகத்தை நெற்றியில் அணிவது சிறப்பு. வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்வது எனது வழி. இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.
இந்த உலகில் நான் யார் என்பதைப் பற்றிய ஒட்டுமொத்த புரிதலையும் கொடுத்துள்ளது. நாம் எதைப் பின்பற்றுகிறோம் அல்லது நம்புகிறோம் என்பதற்காக நாங்கள் துன்புறுத்தப்படுவதில்லை. இந்த நாட்டுக்கு நான் விஸ்வாசமாக இருக்கிறேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இது என்றார்.
மேலும், டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்கில் உள்ள எனது நண்பர்கள் விமானப்படையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்தி அனுப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.