ஏர் இந்தியா விமானம் நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதவிருந்த நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பல உயிர்கள் தப்பித்தது.
இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளுடன் தலைநகர் டெல்லியிலிருந்து நேபாளத்தின் காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அந்த விமானம் 19,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அதே வழியில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேபாள நாட்டின் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் தான் பறந்துகொண்டிருந்தது.
ஆனால், திடீரென ஏர் இந்தியா விமானம் 19,000 அடி உயரத்திலிருந்து கீழே இறங்கியுள்ளது. இரு விமானங்களும் மிகவும் குறுகிய உயர இடைவேளியில் பறந்தன. இதனால், ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதும் சூழ்நிலை உருவானது.
இரு விமானங்களும் மிகவும் குறுகிய இடைவேளியில் பறப்பதை அறிந்த காத்மண்டு விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தை உடனடியாக பறக்கும் உயரத்தை குறைக்கும்படி அறிவுறுத்தியதையடுத்து, நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்திலிருந்து 7,000 அடி உயரத்திற்கு குறைக்கப்பட்டது.
இதன் மூலம் விமான விபத்து தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் விமான கட்டுப்பாட்டு அறையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக திர்புவன் சர்வதேச விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.