வேலூரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மின் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுந்துள்ளது.
மின் வாகனங்களின் பயன்பாடு குறித்து நிபுணர்கள் வாயிலாக தெரிந்து கொண்ட தகவல்கள் என்னென்ன பார்க்கலாம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, நடுத்தர மக்களின் பார்வை தற்போது மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் 1,32,219 மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் தேவையை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மின்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசு, இதற்காக வரிச்சலுகைகளையும் வழங்கி வருகிறது. மறுபுறம் உலகளவில் மின்சார வாகனங்களால் தீவிபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருவதும் தெரியவருகிறது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 3.5 சதவீதம் அளவுக்கு தீ விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மின்சார வாகனங்களில் பொதுவாக லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த லித்தியம் அயான் மின்கலம் அதிகமாக சூடானாலோ, அதிகம் சார்ஜ் செய்யப்பட்டாலோ தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது.
இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே சார்ஜ் போட்டுக்கொள்ளும் வசதியை விற்பனை நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன. இந்த நிலையில்தான் வேலுரில் நடந்துள்ள மின்சார வாகன தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மின்வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்புகிறது.