புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர் களுக்கு எதிரான மற்றொரு வெற்றிகர நடவடிக்கையாக, அவர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்கள் 11 பேர், பாகிஸ்தானை சேர்ந்த அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை துப்பாக்கி முனையில் கடத்தினர். மேலும் அதிலிருந்து 19 பாகிஸ்தானியர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். பிணைக் கைதிகள் அவசர உதவி கோரியதை தொடர்ந்து தெற்கு அரபிக் கடலில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் அங்கு விரைந்தது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து, மீன்பிடிக் கப்பலையும்அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் மீட்டது.
36 மணிநேரத்தில் ஐஎன்எஸ் சுமித்ரா மீட்ட இரண்டாவது மீன்பிடிக் கப்பல் இதுவாகும். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சோமாலிய கிழக்குகடற்பகுதியில் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். மேலும் அதிலிருந்த 17 பேரை சிறைபிடித்தனர். அப்போது ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல் பட்டு ஈரானிய மீன்பிடிக் கப்பலை மீட்டது. அதிலிருந்த 17 பேரும் மீட்கப்பட்டனர்.