ராஜஸ்தானில் பெண் டாக்டர் தற்கொலை செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் ரோட்டில் ரோட்டில் உள்ள ஐஎம்ஏ அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பழனிசாமி, செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தனர். கோவை மாவட்ட தலைவர் டாக்டர் சத்யன், செயலாளர் டாக்டர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவசரமில்லாத மருத்துவப் பணிகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவர்களை காக்கும் தேசிய மருத்துவ சட்டத்தை அமல்படுத்த வேண்டும், டாக்டர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது டாக்டர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்தார். டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் பெண்ணின் உறவினர்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். தொடர்ந்து போலீசார் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அர்ச்சனா சர்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது எங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி டாக்டர்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. அதனை மீறி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தின் 3 1/2 லட்சம் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை மற்றும் டாக்டர்களை தாக்குபவர்கள் மீது சட்ட விதி 48ன் படி கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும். தமிழகத்தில் இந்த சட்டத்தை கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்தார். தமிழக அரசு டாக்டர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக உள்ளது. இந்த சட்ட விதி தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமலில் உள்ளது. எனவே இதனை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும். மருத்துவர்களை காக்கும் தேசிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்கொலை செய்துகொண்ட டாக்டரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0