கடல் வழியே கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா..!!

மாஸ்கோ: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கடல் வழியே அதிகளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகிறது. இத்தனை நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணையை கொள்முதல் செய்துவந்த நிலையில் சமீபகாலமாக குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணையின் அளவை இந்தியா கிடுகிடுவென உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 1,31,506 பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கடல் வழியே இறக்குமதி செய்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் அளவை 3,73,559 பீப்பாயாக உயர்த்தியது ஒன்றிய அரசு.

2022 மே மாதத்தில் கடல் வழியே ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 மடங்குகளுக்கு மேலாக 8,23,361 பேரல்களாக அதிகரிக்கப்பட்டது. அதிக பட்சமாக கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து கடல்வழியே இறக்குமதி ஆகும் கச்சா எண்ணெயின் அளவு 11,83,994 பேரல்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது. கடந்த 5 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு 11 லட்சம் பேரல்களை தாண்டி உள்ள நிலையில் நடப்பு மாதத்தில் இது இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை கடல் வழியே அதிகளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் அளவை இந்தியா கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.