வரும் ஜூலை 13 முதல் 16 வரை மேற்கு ஆசியப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னெட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் ஆன்லைன் மூலமாக விர்ச்சுவல் மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
`I2U2′ என்று அழைக்கப்படும் இந்தக் குழு புதிதாக உருவாக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் I என்பது இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளையும், U என்பது அமெரிக்கா (யு.எஸ்.ஏ), அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) ஆகிய நாடுகளையும் குறிக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு, இதே நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் நாட்டில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். `பொருளாதாரக் கூட்டுறவுக்கான சர்வதேச மன்றம்’ என்று அது அழைக்கப்பட்டது. தற்போது நான்கு நாடுகளின் அரசுகளின் உயர்ந்த பதவிகளில் இருக்கும் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.