லண்டன்: பிரிட்டன் நாட்டு அரசு அடாவடி தனமாக எடுத்த முடிவு ஒன்றிற்கு எதிராக இந்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
பிரிட்டன் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பிரிட்டனின் பொருளாதாரம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரியும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பும் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவின் உருக்கு பொருட்கள் மீதான வரியை பிரிட்டன் உயர்த்தி உள்ளது.
ஐரோப்பாவுடன் உள்ள ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் ஸ்டீல் பொருட்களுக்கு குறைவான வரியே விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் பிரிக்சிட் காரணமாக பிரிட்டன் தற்போது தனது வரி நிர்ணயங்களை மாற்றி வருகிறது. இந்தியாவின் ஸ்டீல் பொருட்களுக்கு என்று கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு சலுகைகளை பிரிட்டன் நீக்கி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் அளவு வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரி கட்ட வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 25 சதவிகிதம் வரை கூடுதல் வரி கட்ட வேண்டும். இதுதான் இந்தியாவை கொதிப்படைய செய்துள்ளது. இந்த நிலையில்தான் பிரிட்டனின் செயலுக்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 22 வகையான பொருட்களுக்கு இந்தியா அதிரடியாக வரியை உயர்த்தி உள்ளது.
15 சதவிகிதம் வரியை இந்தியா பிரிட்டனுக்கு எதிராக விதித்து உள்ளது. விஸ்கி, சீஸ், டீசல், எஞ்சின் பொருட்கள் போன்றவற்றிக்கு வரியை விதித்து உள்ளது. இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் விளக்கம் அளித்துள்ள இந்தியா, பிரிட்டனின் புதிய விதிமுறை தவறானது. இதன் காரணமாக எங்களின் 2,19,000 டன் ஸ்டீல் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதன் காரணமாக 2000 ஆயிரம் கோடி ரூபாய் வரை எங்களுக்கு இழப்பு ஏற்படும். இதை ஈடு செய்ய 15 சதவிகிதம் வரியை உலக வர்த்தக விதிப்படி நாங்கள் உயர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் எங்களின் இழப்பிற்கு தகுந்த ஈடு கிடைக்கும். பிரிட்டன் தங்களின் முடிவை மாற்றினால் நாங்களும் மாற்றுவோம். அதுவரை இதே புதிய வரி விதிப்பு தொடரும் என்று இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து வரும் பிரிட்டன் இந்தியாவை சீண்டி தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட சீஸ், ஸ்காட்ச், விஸ்கி, ஜின், கால்நடை தீவனம், திரவமாக்கப்பட்ட புரொப்பேன், சில அத்தியாவசிய எண்ணெய்கள், அழகு தயாரிப்புகள், ஒப்பனை மற்றும் கழிப்பறை சுத்திகரிப்பு தயாரிப்புகள், வைரங்கள், வெள்ளி, பிளாட்டினம், டீசல் இயந்திர பாகங்கள், தங்கம், டர்போ ஜெட் ஆகியவை மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் இந்த பதிலடியை பிரிட்டன் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.