உச்ச கட்ட தயார் நிலையில் இந்தியா- சீன ராணுவம் – இரு நாட்டு லடாக் எல்லை பகுதியில் திடீர் பதற்றம்..!

புதுடில்லி,”நம் ராணுவத்தின் முப்படைகளும் எப்போதும் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார். நம் நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு புதுடில்லியில் கடந்த 7ல் துவங்கியது. இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள், படைப் பிரிவு தளபதிகள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய நிகழ்வில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள எல்லையில், நம் அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனம் செய்து வருகிறது. இந்நிலையில், நம் படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ராணுவத்தின் மீது நம் நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதை நாம் காப்பாற்ற வேண்டும். ராணுவத்தினர் மீதும், அதன் தளபதிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, நம் அண்டை நாடான சீனாவின்தலைநகர் பீஜிங்கில், அந்நாட்டின் கூட்டு ராணுவத் தலைமையகமான, மத்திய ராணுவ ஆணையகம் உள்ளது. இங்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்ட சீன அதிபர் ஜிங்பிங், ”நாட்டின் இறையாண்மை, மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்,” என, ராணுவ வீரர்களிடையே பேசினார். இரு நாட்டு தலைவர்களும், தங்கள் ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது, எல்லை பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.’குவாட்’ எனப்படும், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் ‘மலபார்’ என்ற பெயரில் கூட்டு கடற்படை பயிற்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான, 10 நாள் பயிற்சி நேற்று, ஜப்பான் கடல் பகுதியில் துவங்கிய நிலையில், சீன அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.