பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெங்களூர் நகரில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தினசரி பரிசோதனையை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா நான்காவது அலை குறித்த அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி, மேற்கண்ட மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்தார்.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பரவல் வேகம் எடுத்து உள்ளது. தினசரி பாதிப்பில் பெங்களூருவில் தான் அதிக பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி பாதிப்பு 200 ஆக பதிவாகி வருகிறது. குடிசை பகுதியினரை விட வில்லா, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரீஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:– பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வணிக வளாகங்கள் உள்பட பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து மார்ஷல்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பெங்களூருவில் தற்போது தினமும் 16 ஆயிரம் சோதனைகளை நடத்தி வருகிறோம். அதை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.