முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர்.
பொறியாளரான இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பதவியில் உள்ளார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. அந்தளவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக சந்திரசேகர் அறியப்பட்டார். இப்படி அதிமுகவின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக திகழும் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். சந்திரசேகர் வீடு மட்டுமின்றி அவரது தந்தையின் இல்லம், அவர் தொடர்புடைய கேசிபி நிறுவனம், ஆலயம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்திர சேகரின் வீட்டில் 13 மணி நேரம் நீடித்த சோதனை அன்றிரவே முடிவடைந்தது .
இதனையடுத்து சந்திரசேகர் தொடர்புடைய கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனம், அந்த நிறுவனத்தின் இயக்குனர் சந்திரபிரகாஷ் வீடு, ஆலயம் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் விசாரணை தொடர்ந்தது. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கும் மேலாக இந்த இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது. கேசிபி நிறுவனம் தொடர்பான விசாரணையின் போதும் நிறுவனத்தின் இயக்குனர் சந்திர பிரகாஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்போது அதிகாரிகள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பின்னர் எவ்வித சிக்கலும் இல்லை என அறிக்கை பெற்ற பின் மீண்டும் விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். இந்த சூழலில் கடந்த 6 நாட்களாக கேசிபி நிறுவனத்தில் நடைபெற்று வந்த சோதனை இன்று காலை நிறைவடைந்துள்ளது.
மேலும் ஆலயம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்று வந்த விசாரணை நேற்று இரவு நிறைவடைந்துள்ளது. சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களும், பென் டிரைவ்களையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. திமுக அரசு பதவியேற்றதும் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர். அப்போது வேலுமணியின் அவரது வலது கரமாக இருந்த சந்திரசேகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது