திருச்சியில் தொடர் மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

திருச்சியில் தொடர்ந்து அதிகாலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது பெய்த லேசான மற்றும் மிதமான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்சியில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையும் மழையுடன் தொடங்கியது. இதர மாவட்டங்களில் ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருச்சியில் விடுமுறை இல்லை. காலையிலேயே மழை தொடங்கியதால் பள்ளிக் குழந்தைகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பணியாளா்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மழையால்
சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டனா். காலை தொடங்கி இரவு வரையில் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவ்வப்போது 10 முதல் 15 நிமிஷங்களுக்கு கனமழையும் இருந்தது. திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. நந்தியாறு தலைப்பில் 27.8 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.): கல்லக்குடி- 25.4, லால்குடி- 4.8, மணப்பாறை- 1.2, முசிறி- 2, புள்ளம்பாடி- 15.6, தாத்தையங்காா்பேட்டை 5, துறையூா்- 2, திருச்சி விமானநிலையம்- 5.3, திருச்சி நகரம்- 20, ஜங்ஷன்- 10, மருங்காபுரி- 2.2, பொன்னணியாறு- 1.2, நவலூா்குட்டப்பட்டு- 4, நந்தியாறுதலைப்பு- 27.8, வாய்த்தலை அணைக்கட்டு- 5.8, சமயபுரம்- 9.6, தேவிமங் கலம்- 2.6, சிறுகுடி-1, கொப்பம்பட்டி- 6, கோவில்பட்டி 4.2, தென்பாடு- 3, பொன்மலை- 17.8, துவாக்குடி- 9 என மொத்தம் 193.5 மி.மீ. மழை பதிவானது. வானிலை மைய அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தொடர் மழை காரணமாக திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பணிக்கு சென்றனர்.