சூலூரில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது..!

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை கண்காணித்து, பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று சூலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் போலீசார் கோவை – திருச்சி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இருகூரையைச் சேர்ந்த தனபால் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.