சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில், 4.53 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜ., மூன்றாம் இடம் பிடித்ததால், முன்னணி கட்சியினர், ‘ஷாக்’ அடைந்தனர்.தமிழகத்தில் சில ஆண்டாக பா.ஜ., வளர்ச்சி குறித்து பலராலும் விமர்சிக்கப்பட்டது. கூட்டணி அமைத்தே போட்டியிட்டதால், பிரதான கட்சிகளும், கடந்த காலங்களில் வாங்கிய ஓட்டுகளை வைத்து அலட்சியம் செய்தன.
வளர்ச்சிக்கேற்ப இடங்கள் கிடைக்காததால், பா.ஜ., தனித்து போட்டியிடும் என, தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 60 வார்டுகளிலும், பா.ஜ., வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர். மாவட்டத்தை பொறுத்தவரை, கூட்டணி கட்சிகள், பா.ஜ.,வுக்கு என எந்த பிரதிநிதித்துவம் வழங்கப்படாத பகுதியாக இருந்தது. இந்நிலையில், குறைந்த கால அவகாசத்தில் நடத்தப்பட்ட மாநகராட்சி தேர்தலில், முக்கிய தலைவர்கள் பிரசாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை எதுவும் நடத்தப்படாத நிலையில், பா.ஜ., பரவலாக ஓட்டுகளை பெற்றுள்ளன.
அதன்படி, மாநகராட்சியை பொறுத்தவரை, 33, 50வது வார்டுகளில், பிரதான கட்சியான அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அத்துடன், 8, 10, 11, 14, 15, 17, 29, 30, 32, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 46, 48, 54, 55, 56, 57 என, 23 வார்டுகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மாநகராட்சியில் பதிவான, 4 லட்சத்து, 71 ஆயிரத்து, 962 ஓட்டுகளில், பா.ஜ., வேட்பாளர்கள் மட்டும், 21 ஆயிரத்து, 393 ஓட்டுகள் பெற்றுள்ளனர். இது, 4.53 சதவீதம். இதனால், வழக்கமாக, பா.ஜ., ஓட்டு சதவீதம், ஒரு சதவீதத்துக்கம் கீழ்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டிருந்த பிரதான கட்சிகளுக்கு, மாநகராட்சி தேர்தல் முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவு ஓட்டு வங்கி உள்ளது என பெருமை சாற்றிக்கொண்டிருக்கும், பா.ம.க.,வை விடவும், பெரும்பாலான வார்டுகளில் அதிக ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. இதன்மூலம், சேலம் மாவட்ட பா.ஜ.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.ஈரோட்டிலும் வளர்ச்சி: ஈரோடு மாநகராட்சியில், 59 வார்டில், 2 லட்சத்து, 66 ஆயிரத்து, 496 ஓட்டுகள் பதிவானது. அதில், பா.ஜ., – 12 ஆயிரத்து, 96 ஓட்டுகளை அதாவது, 4.53 சதவீத ஓட்டுகளை பெற்று முன்னேறியுள்ளது. கடந்த காலங்களில், 0.61 சதவீதத்துக்கும் குறøவான ஓட்டுகளை பெற்ற, பா,ஜ., தனித்து போட்டியிட்டு, 4.53 சதவீத ஓட்டுகளை பெற்று, 3வது இடத்தை பிடித்துள்ளது, பா.ஜ.,வினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.