கோவையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- மேயர் கல்பனா தலைமையில் நடந்தது..!!

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் மேயர் கல்பனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று மேயர் கல்பனா தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி மனுக்களை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் அளித்தனர். மதியம் 12.30 வரை சுமார் 70க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். இந்த கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, அனைத்து மண்டல உதவி கமிஷனர்கள், அனைத்து துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.