கோவையில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் : தனிப்படை அதிகாரிகள் அதிரடி சோதனை- பணம் பயணிகளிடமே திருப்பி ஒப்படைப்பு..!!

கோவையில் இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தின விழா என 3
நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் கல்லூரிகள் மாணவர்கள்,
அரசு ஊழியர்கள், தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் 3 நாட்கள்
விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில் சொந்த ஊர் செல்லும் பொது மக்கள் போதுமான பஸ் வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். இதனைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணத்தை வசூலித்து வந்தனர். தனியார் ஆம்னி பஸ்கள் 2 முதல் 3 மடங்கு உயர்த்தினர்.
குறிப்பாக சென்னைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்
விடுமுறை நாளில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணைத்து
வசூலித்தனர். இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அதிக கட்டணத்தில்
சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தை நாடி
சென்றனர்.
இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப் படும் தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நேற்று இரவு முதல் நாளை மறுநாள் வரை இரவு நேரத்தில் தீவிர சோதனை  மேற்கொள்ள உள்ளனர். இதில் பஸ்களில் உள்ள பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்யப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நேற்று 45 பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிக கட்டணம் வசூல்
செய்யப்பட்ட தனியார் ஆம்னி பஸ்களின் நிறுவன ஊழியர்களிடம் பணம் திரும்ப
பெறப்பட்டது. அந்த பணம் பயணிகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.