கோவையில் 1120 பேருக்கு குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

கோவை மாவட்டத்தில் சூலூர், பன்னீர்மடை மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 93 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கோவையை சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 46 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1120 பேருக்கு வழங்கினார்.
மேலும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தாமாகவே வீடுகட்டும் திட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் வீடு கட்டிக் கொள்ள  ஆயிரம் பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணையும் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.