கோவையில் காரில் சென்ற பெண்ணை குடிபோதையில் வழிமறித்த வாலிபர்கள். கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு. 

கோவை, துடியலூர் அருகே உள்ள ருக்குமணி காலனி, சந்தானம் குடியிருப்பு பகுதியில் குடியிருப் பவர் 19 வயது இளம்பெண். இவர் சம்பவத்தன்று காரில் வடவள்ளியில் இருந்து துடியலூருக்கு இடையர்பாளையம் வழியாக சென்றார்.  கவுண்டம்பாளையம் ஒன்றியம் ரோடு பகுதியில் மாநகராட்சி பள்ளி அருகில் சென்ற போது 2 வாலிபர்கள் வந்த கார் இளம்பெண் காரை பின் தொடர்ந்து வந்தது. அந்த வாலிபர்கள் இளம்பெண் காரை திடீரென்று குறுக்கே நிறுத்தி தடுத்தனர்.
அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள் இளம்பெனிடம் குடிபோதையில் தகராறு செய்தனர். இளம் பெண்ணிடம் அவதூறாக பேசிய அவர்கள் திடீரென அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். காருக்கு வழிவிடும் தகராறில் இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணிடம் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.  சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்கள் சென்ற காரை வழிமுறைத்த 4 வாலிபர்கள் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவையில் அதேபோன்று சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.