50 முதல் 100 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்படும் என்று அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2020 ஆகஸ்ட் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து ராமர் கோயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிந்து, 2024 ஜனவரியில் ராமர் சிலை நிறுவப்பட்டு, அதனை தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 50 முதல் 100 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்படும் என்று இமாம் சங்க தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்து 50 முதல் 100 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தலைமுறை முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்வார்கள்.
அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் நீதிபதியோ அல்லது ஒரு முஸ்லிம் ஆட்சியாளரோ ஆட்சிக்கு வந்தால், அவர் ராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டமாட்டாரா?. கண்டிப்பாக (பாபர் மசூதி) கட்டப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது இந்திய அரசியலமைப்பை மீறியதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.