தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளின் விவரத்தை அனுப்புங்கள் என எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பிளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பிளர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம் என தெரிவித்துள்ளார். எனவே, தொகுதிகளில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதலவர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.