சென்னை: எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி உள்ளார். ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார்..
இதற்கு நடுவில் கட்சியின் நிலைமை இனி என்னாகும் என்கிற அக்கறை கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுகவில் இருந்து OPS நீக்கம் – தீர்மானம் கொண்டு வந்தார் நத்தம் விஸ்வநாதன்!
எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும் என்று 70 பேர் குரல் கொடுத்தனர். ஆனால், ஓபிஎஸ்-க்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.
அவரின் சொந்த மாவட்டமான தேனியின் மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், கன்னியாகுமாரி அசோகன் என 5 பேர் மட்டுமே பின்னால் உள்ளதாக தெரிகிறது.
இதேபோன்று தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேரில் 68 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதிலும், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகிய 6 தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே மற்றொரு அணியாக உள்ளனர். இப்படி 2 தரப்பின் ஆதரவாளர்கள் திரண்டு காணப்பட்டாலும், இதை வைத்து மட்டுமே எந்தஒரு தீர்க்கமான முடிவுக்கும் வந்துவிடுமா? என்ற சந்தேகம் வருகிறது.
காரணம், அதிமுகவை பொறுத்தவரை, ஓட்டுவங்கியில் அதிக சதவீதத்தை வைத்திருக்கும் கட்சி. திமுகவை விட, அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் எல்லா காலத்திலுமே அதிகம் என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட கட்சி, இனி என்னாகும் என்பதே, தொண்டர்களின் கவலையாக உள்ளது. இன்றைய தினம் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. இதுதான் அதிமுகவின் சறுக்கலுக்கு முதல் காரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது..
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இவர்களில் யார் கையில் கட்சி போனாலும், அது கட்சிக்கு மைனஸ்தான் என்பதை தொண்டர்கள் அறிந்து வைத்துள்ளனர். கட்சியின் இன்றைய நிலைமை, வாக்கு சதவீதத்தை அடியோடு குலைக்கும் நிலைமைக்கு ஆளாகிவிடும். அதாவது, அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கே என்ற ரீதியில் சட்ட விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று சொல்லிவந்த நிலையில், இது ஜெயலலிதாவின் தொண்டர்களை அதிர செய்துள்ளது. காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இன்று ஜெயலலிதா பதவியையே தூக்கி எறிந்தது எடப்பாடிக்கு மைனஸாகவே பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இப்போது தனித்து விடப்பட்டுள்ளதால், நிச்சயம் தென்மண்டலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலுவார். இதற்காக, சசிகலா, திவாகரன், தினகரன், ஓபிஎஸ் போன்றோர் ஒன்று சேர நேர்ந்தால், நிச்சயம் அதிமுக மேலும் பலவீனப்பட்டுவிடும் என்பது சொல்ல வேண்டியதில்லை..
இப்படி அதிமுக இரண்டாகும்பட்சத்தில், இதில் உள்ளே நுழைந்து லாபம் பார்க்கும் கட்சிகள் திமுகவும், பாஜகவும்தான். இதுதான் நடைமுறை அரசியல். பிரதான கட்சி பலவீனமாகும்போது, அதை மேலும் பலவீனமாக்கி, தங்கள் கட்சியை பலமாக்குவதுதான் கள அரசியல். இப்போதே திமுகவும், பாஜகவும் தயாராகி விட்டதாக சொல்கிறார்கள். அதிமுக விவகாரம் தலைதூக்கியபோதே, சைலண்டு மோடுக்கு சென்றுவிட்டது பாஜக. இவர்கள் 2 பேர் பிரச்சனையிலும் தலையிடவே இல்லை.
கூட்டணி கட்சி என்ற முறையில், இவர்களை அழைத்து பேசி, சமாதானம் செய்வார்கள் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தலையிடவில்லை. இதற்கு காரணம், அதிமுகவின் ஓட்டுக்கள் சிந்தாமல், சிதறாமல் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுவதாக கூறப்பட்டது. மற்றொன்று, ஊர் ரெண்டு பட்டால் அதை வைத்து குளிர்காய்வதும், மேலிட பாணி என்பதால், அதிமுக விவகாரங்களில் கடைசிவரை மூக்கை நுழைக்கவில்லை.
இன்றைய தினம், அதிமுகவின் அதிரடிகளை, பாஜக தனக்கு சாதகமாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. தென்மண்டலங்களில அதிமுகவின் அதிருப்திகளை தங்கள் பக்கம் இழுக்கவும் தயாராகிவிட்டதாம். அதுபோலவே, திமுக இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல், தன்பாணி அரசியலை முடுக்கி விட்டுள்ளது. தென்மண்டலங்களில் அதிமுகவில் பிளவு என்றதுமே, இதற்காக, தங்கதமிழ்ச்செல்வனை களத்தில் இறக்கிவிட்டுள்ளதாம்.அதிமுகவின் அதிருப்தியாளர்களை, அப்படியே திமுக பக்கம் கொண்டு வரும் அசைன்மென்ட்டும் இவருக்கு தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
ஆக, ஓபிஎஸ் – எடப்பாடி, இவர்கள் 2 பேரின் அதிகார சண்டையால். ஓட்டுவங்கி சரிந்து. முக்கிய தலைவர்களும், திமுக – பாஜக கட்சிகளுக்கு தாவும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்திலும், அதிருப்தி தோல்வியிலும் ஓபிஎஸ் இனி அதிரடி சுழட்டலாம். அதேபோல, கட்சி தன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமியும் வெற்றி முழக்கம் போடலாம். ஆனால், கட்சி தன் மதிப்பையும், முக்கியத்துவத்தையும், பலத்தையும், இழந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.