கோவை மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்ததாக மாற்ற உழைப்பேன் என்று மேயர் பதவிக்கான திமுக வேட்பாளர் ஏ.கல்பனா கூறினார்.
கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 19-வதுவார்டு கவுன்சிலர் ஏ.கல்பனா (40),மேயர் பதவிக்கான திமுக ேவட்பாள ராக நேற்று அறிவிக்கப்பட்டார். மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளதால், இவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
கல்பனா, கோவை மணியகாரன் பாளையம் வீரசிவாஜி வீதியைச் சேர்ந்தவர். கணவர் ஆனந்தகுமார், மகள் காவியா , மகன் கிருத்திக் சாய் ஆகியோர் உள்ளனர். பெரிய பொருளாதார பின்புலம் இல்லாத நிலையில் மேயர் வேட்பாளராக கல்பனாவை திமுக தேர்வு செய்துள்ளது. அவருக்கு பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேயர் வேட்பாளராக என்னைத் தேர்வு செய்ததை எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதுகிறேன். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவையின் திமுக பொறுப்பாளர்கள், வெற்றி பெறச் செய்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டர்களும் நிர்வாக பொறுப்புகளுக்கு வர முடியும்.
கோவை மாநகராட்சியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து, கோவையை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர கடினமாக உழைப்பேன். தமிழக முதல்வர் ஆசியுடன் அனைத்து திட்டங்களையும் செய்து தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
துணை மேயர் வெற்றிச்செல்வன்
துணை மேயர் வேட்பாளராக 92-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆர்.வெற்றிச்செல்வன்(51) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் குனியமுத்தூர் பி.கே.புதூர் கோவில் வீதியைச் சேர்ந்தவர். மனைவி காலமாகிவிட்டார். மதி, கீர்த்தி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஏற்கெனவே இவர், 2006 முதல் 2011-ம் ஆண்டு வரைகுனியமுத்தூர் நகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும், சொந்தமாக கட்டுமான பொருட்கள்விநியோகம் செய்யும் நிறுவனம்மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.
ஆர்.வெற்றிச்செல்வன் கூறும் போது, ‘எதிர்பாராத நிலையில் இப்பதவி கிடைத்துள்ளது. திறம்பட செயல்பட வேண்டும். பதவியேற்றவுடன் அமைச்சர், மேயர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றார்.