சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட்டு பட்டியலிட்டுள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது; இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
வன்னியர்களுக்கு எதிர்காலத்திலும் கூட இட ஒதுக்கீடு வழங்க முடியாதவாறு ஐகோர்ட்டு மதுரைக் கிளை ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அகற்றப்பட்டுள்ளன.
வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக 1980-ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயவில்லை. வன்னிய மக்களுக்கு உரிய உள் இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் நான் ஓய மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.