நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன் – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம்..!

கொல்கத்தா: தமிழக அமைச்சர் உதயநிதியின் கருத்தை ஆதரிக்கவில்லை. சனாதன தர்மத்தை மதிக்கிறேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்து தேசிய அளவில் விவாதப்பொருளாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: இந்தியாவில் பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள் உள்ளன. நாம் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடி வருகிறோம். எனக்கு வேதங்கள் தெரியும். பூஜை, வழிபாட்டு நடைமுறைகள் தெரியும். மேற்குவங்க அரசு சார்பில் சனாதன தர்ம அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

திரிணமூல் காங்கிரஸார் கோயில், மசூதி, தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கிறோம். எந்தவொரு மதம் குறித்தும் அவதூறாகப் பேசக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு.

தமிழக அமைச்சர் உதயநிதியின் கருத்தை ஆதரிக்கவில்லை. இளம்வயது என்பதால்அவர் இவ்வாறு பேசியிருக்கக்கூடும் என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை அனைத்துமதங்களையும் மதிக்கிறேன். இவ் வாறு மம்தா தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறும்போது, ”உதயநிதியின் கருத்துக்கும் இண்டியா கூட்டணிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. சனாதன தர்மத்தை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.