சொந்த வீட்டில் நுழைவது போன்ற நிம்மதி, மகிழ்ச்சியை பெற்றுள்ளேன்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

சென்னை ஐ.சி.எப் மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இந்த மேம்பாலம் ரூ.61.98 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொளத்தூர் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் ரூ.61.98 கோடியில் சிட்டிபாபு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்து இந்த பாலம் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சிட்டிபாபு பெயரில் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதை எண்ணி மகிழ்கிறேன். கடந்த 2 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் சென்னை எவ்வாறு மாறி உள்ளது என்பதை பார்க்கிறீர்கள்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பல மாவட்டங்களுக்கு சென்று பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். எனது தொகுதிக்கு வரும்போது கடமைகளை நிறைவு செய்துவிட்டு சொந்த வீட்டில் நுழைவது போன்ற நிம்மதி, மகிழ்ச்சியை பெற்றுள்ளேன். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பது எனது பழக்கம் அல்ல. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களுக்காக பாடுபட்ட இயக்கம் திமுக. சென்னை மேயராக நான் இருந்தபோது 9 பாலங்கள் கட்டப்பட்டன. ஓராண்டில் கட்ட வேண்டிய பாலத்தை 10 மாதங்களில் கட்டியுள்ளோம். முதன்முறையாக சென்னையில் மேம்பாலம் கட்டப்பட்டதே கலைஞர் ஆட்சியில்தான். இன்று நான் உயிருடன் இருக்க சிட்டிபாபுவே காரணம். திராவிட மாடல் அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும்.

நான் முதலமைச்சராக ஆனதற்கு கொளத்தூர் தொகுதி மக்கள் அளித்த மிகப்பெரிய வெற்றிதான் காரணம். 3 முறை என்னை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள். நல்லதை ஏற்று, அல்லதை கெட்டதை, புறந்தள்ளி ஆட்சி செய்து வருகிறேன். நான் ஆட்சி பொறுப்பேற்ற போது இதே இடத்தில் கூறினேன். இந்த ஆட்சி எங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் அல்ல ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து தான்.” என பேசினார்.