சென்னை: நடிகை விஜயலட்சுமியுடன் உறவு கொண்டேன் என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்முறையாக ஒப்புக் கொண்டார். நடிகை விஜயலட்சுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக வளசரவாக்கம் போலீஸார் அழைத்திருந்தனர்.
அதற்காக சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ள சீமான், விமான நிலையத்தில் புதிய தலைமுறை சேனலுக்கு ஒரு பேட்டியை அளித்திருந்தார். அப்போது சீமானிடம் உங்கள் வீட்டில் காவல் துறையினர் நடந்து கொண்டதை எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர் கேட்டார். அதற்கு சீமான், வீட்டில் போலீஸார் நடந்து கொண்டதை அநாகரீகமாக பார்க்கிறேன். அவர்கள் சம்மனை ஒட்டும்போது தடுத்திருந்தால் அது போலீஸாரை பணி செய்ய விடாத செயல். ஒட்டும் போது யாரும் தடுக்காத நிலையில் அது எப்படி பணி செய்ய விடாமல் தடுத்ததாகும்? ஒட்டிட்டு நீங்கள் போய்விட்டீர்கள்.
அதை நாங்கள் படித்துவிட்டோம், கிழித்தோம். படித்தபிறகு அது எதற்காக? அதற்காக உள்ளே வந்து கதவை திறந்து காவலாளியையும் என் நிர்வாகியையும் அடித்தது அநாகரீகம் என்றார். “வயசு பிள்ளைய குண்டுக்கட்டா தூக்கிட்டு போய் சோள காட்டில் வைத்து கற்பழிச்சேனா” என சேலத்தில் பிரஸ் மீட்டில் நீங்கள் (சீமான்) கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என நிருபர் கேட்டார்.
அதற்கு சீமான், “யார் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். சமூகவலைதளங்கள்தானே, அவர்கள் யார் என்னை எப்போதும் திட்டுவோர்தானே! வலுக்கட்டாயமாக தூக்கிட்டு போய் பாலியல் வன்புணர்வு செய்தவர்களை விட்டுவிட்டு, காசுக்காக என்னுடன் வந்தவரை பெரிய விஷயமாக பேசுகிறார்கள்” என கோபமாக கொந்தளித்து பேசியிருந்தார். இத்தனை நாள் வரை எனக்கும் விஜயலட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டுக் கொண்டிருந்த சீமான் முதல் முறையாக இந்த விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
முன்னதாக இன்று இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவுள்ள நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வீட்டில் நான் இல்லை என்றால் சம்மனை எனது மனைவியிடம் கொடுத்திருக்கலாம். எனக்கு வரும் சம்மனை அனைவரும் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே! திட்டமிட்டு என்னை அவமானப்படுத்தும் வகையில் கதவில் சம்மனை ஒட்டியுள்ளனர். சம்மனை எனக்கு கொடுக்காமல் கதவில் ஒட்டிவிட்டு செல்வது அநாகரீகம், சம்மனை வைத்து சாமி கும்பிடவா முடியும், வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். கைது செய்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜையும் காவல் துறை தாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு, சாராய வழக்குகளில் சட்டம் தன் கடமையை செய்ததா? என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் பாலியல் புகாரை கையில் எடுக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மட்டும்தான் என் மீது புகார் வருகிறது. அந்த பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாததால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 8 மணிக்கு வருமாறு காவல்துறைதான் கூறியது. கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும் என் குடும்பத்தையும் வன்கொடுமை செய்கிறார்கள். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.