சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவரை தாக்கியவன், வேறு பல தலைவர்களையும் கொல்ல தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்துள்ளான்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி, கடந்த வாரம் வீட்டில் இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், பால் பெலோசியை சுத்தியலால் தாக்கினான்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் எலும்பு முறிந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த பரபரப்பு சம்பவத்தின்போது, நான்சி பெலோசி வாஷிங்டனில் இருந்தார். இதனால், அவர் உயிர் தப்பினார்.
தாக்குதல் நடத்தியன் பெயர் டேவிட் டி பேப் (42). அவனை கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையின் போது, நான்சியை கடத்தி செல்லும் திட்டத்துடன் வந்ததாகவும், அவர் இல்லாததால் பால் பெலோசியை தாக்கியதாகவும் தெரிவித்தான்.
மேலும், கலிபோர்னியா மாகாணம் மற்றும் நாட்டில் உள்ள முன்னணி தலைவர்களை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டமிட்டே இங்கு வந்ததாக கூறினான். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார், அவனுடைய பின்புலம் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்.
இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அரசு வக்கீல் புருக் ஜென்கின்ஸ் கூறுகையில், ”நான்சி பெலோசியை தவிர வேறு சில தலைவர்களையும் அவன் குறி வைத்து இருந்தான்”என்றார். ஆனால் அவர்கள் யார் என்பது பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.