2 குழந்தைகளை விற்ற கணவன் – மனைவி கைது

கோவை மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ஜோஸ்பினுக்கு அப்பநாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஓட்டல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் ( வயது 34) அவரது மனைவி அஞ்சலி குமாரி (வயது 24) ஆகியோரிடம் குழந்தை விற்பனை தொடர்பாக விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களது ஓட்டலுக்கு பெயர் முகவரி தெரியாத வடமாநில பெண் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். அவர் அடிக்கடி கடைக்கு சாப்பிட வந்ததால் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது என்று கூறினார். பின்னர் அவர் அந்த குழந்தையை தங்களிடம் கொடுத்துவிட்டு சென்றார்.அதை நாங்கள் ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு சட்ட விரோதமாக விற்று விட்டோம். என்று கூறினார் இதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ஜோஸ்பின் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதே போல கோவை மாவட்ட குழந்தைகள் மேற் பார்வையாளர் தனுசியாவும் சூலூர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் செலகரிசலைச் சேர்ந்த அணி தாமணி -விஜயன் தம்பதியிடம் மகேஷ் குமார் மற்றும் அஞ்சலி குமாரி ஆகியோர் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு மாத பெண் குழந்தை இருப்பதாக கூறியுள்ளனர். அனிதா மணி – விஜயன் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் அந்த பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்பினார்கள். அதற்கு மகேஷ் குமார் அஞ்சலி குமாரி தம்பதி ரூ.2 லட்சம் கொடுத்தால் பெண் குழந்தையை தருவதாக கூறியுள்ளனர். உடனே அனிதா மணி – விஜயன் தம்பதி ரூ.30 ஆயிரத்தை முதல் கட்டமாக கொடுத்து குழந்தையை வாங்கி உள்ளனர். அதன்பிறகு பேசியபடி அவர்கள் முழு தொகையும் தரவில்லை என்று தெரிகிறது. இதனால் மகேஷ் குமார் – அஞ்சலி குமாரி தம்பதி அவர்களிடமிருந்து குழந்தை எடுத்துச் சென்று விட்டனர். குழந்தையை விற்ற தம்பதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இ ருந்தது.இதுகுறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பதிவான வழக்குகளின் அடிப்படையில் 2 குழந்தைகளை விற்றதாக ஓட்டல் நடத்தி வந்த மகேஷ் குமார் அவரது மனைவி அஞ்சலி குமாரி ஆகியோரை கைது செய்தனர். விற்பனை செய்யப்பட்ட 2 குழந்தைகளும் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைகள் விற்பனை செய்த தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.