அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு நிறுவனர் ஆ.ஹென்றி பேசும்போது, “முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
பத்திரப் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரப் பதிவு செய்வதற்கான டோக்கன் முறையில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை அங்கீகரிப்பதற்கான சிறப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கட்டிடத் திட்ட அனுமதி, நிலை வகைப்பாடு மாற்றம், மனை உட்பிரிவு, வீட்டுமனைக்கான அங்கீகாரத்தை எளிமையாக்க வேண்டும். அணுகு சாலைக்கான விதிகளைத் தளர்த்த வேண்டும்” என்றார்.
இதில் கலந்துகொண்ட தமிழக வீட்டுவசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில், “பல்வேறு சங்கங்கள் தெரிவிக்கும் ஆலோசனையின் பேரில், அரசு பல முக்கிய முடிவுகளை எடுக்கிறது. நிறைய கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. அவற்றை வரைமுறை செய்வதில் சிக்கல்கள் உள்ளன. சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்படாத கட்டிடங்கள் இடிக்கப்படும்.
எனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அப்போது, கட்டிடங்கள், மனைப் பிரிவு அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இருக்கும். இதை எங்கள் துறை கண்காணிக்கும் என்று அரசுத் தரப்பில் உத்தரவாதம் வழங்க உள்ளோம்.
வீட்டுமனை வரன்முறை சட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.