தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..
இதன் காரணமாக இன்று முதல் 13ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை பாதிப்பை எதிர்கொள்ளத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக தயாராகிவருகிறது. அதன்படி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1.சென்னை, 2.காஞ்சிபுரம், 3.செங்கல்பட்டு, 4.திருவள்ளூர், 5.வேலூர், 6.ராணிப்பேட்டை, 7.திருவண்ணாமலை, 8.விழுப்புரம், 9.கடலூர், 10.திருவாரூர், 11.நாகை, 12.மயிலாடுதுறை, 13.தஞ்சை, 14.அரியலூர், 15.பெரம்பலூர், 16.புதுக்கோட்டை, 17.சேலம், 18. ராமநாதபுரம், 19. கள்ளக்குறிச்சி, 20. திருச்சி, 21.மதுரை, 22.திண்டுக்கல், 23.தேனி, 24.கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 1.நாமக்கல், 2.சிவகங்கை, 3.தருமபுரி 4.கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.