ஏ.ஆர.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு! தனது வேதனையை பதிவிட்ட ரஹ்மான்..

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்க்கிழமை (நவ. 19) இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.

மேலும், அவர்களது மகன் ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா பக்கத்தில் “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.

சாய்ரா தரப்பிலிருந்து வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா தெரிவித்திருப்பதாவது, “எங்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையேயான காதலைக் கடந்தும், இருவருக்குமிடையே பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், சவாலான இந்த தருணத்தில், பொதுமக்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு புரிந்துகொண்டு மதிப்பளிக்கவும்” சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் கடந்த 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

இது தொடர்பாக ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில்,

“நாங்கள் எங்களது திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவை நோக்கி நகர்ந்துவிட்டது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இந்த சிதைவுகள் மீண்டும் எங்களின், இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அதற்கான அர்த்தத்தை நாங்கள் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்த எங்களின் நண்பர்களுக்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இருவருக்குமிடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மிகுந்த வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளேன் என்றும் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தநிலையில், தற்போது ஏ.ஆர். ரகுமானும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.