இந்தி தேசிய மொழி அல்ல… தமிழுக்கு அதிர்ந்த அரங்கம்; பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் பரபரப்பு

சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்நிரன், இந்தி தேசிய் மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும்தான் என்று பேசியதும் தமிழ் என்று பேசியபோது மக்கள் உற்சாகத்துடன் அரங்கம் அதிர கூச்சலிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 23-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய அஸ்வின், எந்த மொழியில் பேச வேண்டும் என கேட்டார். அப்போது, ஆங்கிலத்தில் பேசலாமா என்று கேட்டபோது, மாணவர்கள் உற்சாகமாகக் கூச்சலிட்டு சம்மதம் தெரிவித்தனர். அதே போல, அஸ்வின் தமிழில் பேசலாமா என்று கேட்டதற்கு அங்கே இருந்த மாணவர்கள் அரங்கமே அதிர உற்சாகக் கூச்சலிட்டு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், இந்தியில் பேசலமா என்று அஸ்வின் கேட்டதற்கு மாணவர்கள் அமைதியாக இருந்தனர். அப்போது, அஸ்வின், இந்தி தேசிய மொழி அல்ல, அது அலுவல் மொழி என்று பேசியதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

பட்டமளிப்பு விழாவில் தொடர்ந்து பேசிய அஸ்வின், யாராவது என்னை நீ சரிபட்டு வரமாட்ட என்று கூறினால் தான் அதை செய்வேன். கேப்டன் விஷயத்தில் யாரும் என்னை அப்படி கேட்கவில்லை என்று தெரிவித்தார். அஸ்வின் பேசும்போது, ‘நான் கேப்டன் ஆகாததற்கு இன்ஞ்சினியரிங் படித்ததுதான் காரணம். யாராவது வந்து என்னால் முடியாது என்று சொன்னால் நான் அதை செய்துவிடுவேன். உன்னால் முடியும் என்று சொன்னால் அதைவிட்டுவிடுவேன். நிறையபேர் என்னிடம் ‘நீ இந்திய அணிக்கு கேப்டன் ஆகிவிடலாம்’ என்று சொன்னதால்தான் விட்டுவிட்டேன். யாராவது வந்து நீ கேப்டனாக ஆகவே மாட்டாய் என்று சொல்லியிருந்தால் விழித்திருப்பேன். மக்கள் உங்கள் முன்னாள் வந்து உங்களால் முடியாது என மீண்டும் மீண்டும் சொல்வார்கள். உங்களால் முடியாது என சொல்வதற்கு கோடிபேர் இருப்பார்கள். அவர்கள் உங்களது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாதவர்கள். வாழ்க்கை முழுவதும் மாணவராகவே இருக்க வேண்டும். மாணவராக இருக்கும்போது கற்றுக்கொண்டே இருப்பீர்கள். மாணவராக இல்லை என்றால் நீங்கள் கற்பது நின்றுவிடும்’ என பேசினார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடினார். அந்த தொடரில், அடிலெய்டு டெஸ்ட் போட்டி முடிந்ததும் தான் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின் ரவிச்சந்திரன் இந்திய அணிக்காக மொத்தம் 765 விக்கெட்டுகளையும், 537 டெஸ்ட் விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.