சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மது விலக்கு ஆயத்தீர்வை துறையில் வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மது பானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
பீர் வகை மதுபானங்களின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. குவாட்டர் ஒன்றிற்கு சாதாரண ரகங்கள் ரூ. 10-ம் மீடியம், உயர் ரகங்கள் ரூ.20-ம் விலை உயர்ந்துள்ளது. ஆப் பாட்டில் சாதாரண ரகங்கள் ரூ. 20-ம், மீடியம், உயர் ரகங்களுக்கு ரூ.40-ம் விலை உயர்ந்துள்ளது. புல் பாட்டில் சாதாரண ரக மதுபானங்களுக்கு ரூ. 40-ம், மீடியம் மற்றும் உயர் ரகங்களுக்கு ரூ. 80-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. பீர் வகை மதுபானத்தின் விலை உயர்வு மூலம் மட்டும் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்பு உள்ளது.