இனி தமிழில் தான் இனிஷியல், கையொப்பம் இட வேண்டும்-பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை உத்தரவு..!!

ள்ளி மாணவர்கள் தங்கள் கையொப்பத்தையும் இனிஷியலையும் (பெயரின் முன்னெழுத்து) தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெயர்களை பதிவு செய்யும் போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவரவும் மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும். மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும், முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும் தமிழில் என கீழ்க்கண்டவாறு சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள்

பெயரின் முன்னெழுத்தும், கையொப்பமும் தமிழில் இடவும்

முதற்கட்டமாக EMIS வழியாகப் பராமரிக்கப்படும் 300 மின் பதிவேடுகளில் மாணவர் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர் பெயர்களை தமிழில் பெயர் பதிவேற்றல் செய்யும் பொழுது அதன் முன்னெழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் என அனைத்து நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக 2021- 2022ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சரால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.

‘தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடமபடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்’.

மேற்படி அறிவிப்பு தொடர்பாக தமிழ் வார்ச்சி இயக்குநர் அவர்கள் தனது 15.09.2021ஆம் நாளிட்ட கடிதத்தில் தமிழ்நாடு அரசின் ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாகத் தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்கச் செய்திடும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே ஒப்பமிட வேண்டும் என முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initials) (தந்தை, தாய், ஊர்) பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது. மேலும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசு கடிதத்தில் அரசுத் துறைகளில் வெளியிடப்படும் அறிவிப்புகள், அறிவிக்கைகள், ஏல விளம்பரங்கள், இதர விளம்பரங்கள் போன்றவை வெளியிடுகையில் அதில் அலுவலர்களின் பெயர்களுக்கு முன் குறிப்பிடப்படும் முன்னெழுத்தானது ஆங்கில எழுத்து உச்சரிப்பிற்கான தமிழ் எழுத்து (எஸ்.முத்து) எழுதப்படுகிறது.

இதனைத் தவிர்த்து, சரியாக தமிழ் முன் எழுத்தையே (சு.முத்து) பயன்படுத்துமாறும் அவ்வாறே அரச அலுவலர்கள் கையொப்பமிடும்போது பெயருக்கு முன் சரியான தமிழ் எழுத்துக்களையே குறிப்பிட்டு கையொப்பமிடுமாறும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொட்டில் பழக்கம் எனத் தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன்முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள், பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம் வருகைப் பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும். மேலும், மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.