டேராடூன்: பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள், துப்பாக்கிகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் வீசப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் கூறும்போது, “இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களுடன் பயிற்றுவிக்கப்பட்ட பருந்துகளையும் பயன்படுத்தி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிகளுக்கு வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தலை சமாளிக்க பாதுகாப்புப் படையினருக்கு இது உதவியாக உள்ளது” என்றனர்.
உத்தராகண்ட் மாநிலம் அவுலியில் இந்தியா – அமெரிக்கா இடையிலான 18-வது கூட்டு ராணுவப் பயிற்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் பருந்துகளை பயன்படுத்தி எதிரிகளின் ட்ரோன்களை வீழ்த்துவது எப்படி என்பது குறித்த செயல் விளக்கத்தை இந்திய ராணுவம் அளித்தது. இத்தகைய நோக்கத்துக்கு இந்தப் பறவையை பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்று ராணுவ அதிகாரிகள் கூறினர். இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே போர் உத்திகள் மற்றும் நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.