45 ஏக்கரில் விழா மேடை, லட்சம் பேருக்கு கறி விருந்து என அமைச்சர் மூர்த்தி இல்ல விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தென்மாவட்டங்களில் சாமானியர் இல்ல விழாவே தடபுடலாக நடக்கும். அமைச்சர் வீட்டு விழானா சும்மாவா?… வணிக மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மூத்த மகனான தியானேஷின் திருமணம் மதுரை ரிங் ரோட்டில் திருவிழா போல் நடந்தது.
மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பி.மூர்த்தி நீண்டகால திமுக உறுப்பினர். 2006 ஆம் ஆண்டு முதன்முறையாக சோழவந்தான் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். பின் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2021ஆம் ஆண்டு திமுக அரசின் அமைச்சராகவும் பதவியேற்றார். மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். தற்போது தனது மூத்த மகனான தியோனஷுக்கு திருவிழாபோல திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
மாநாடுகளுக்குப் பந்தல் அமைக்கும் பிரபல மேடை அமைப்பாளர் பந்தல் சிவா மேடை அலங்காரங்களைச் செய்துள்ளார். வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகில் 32 ஏக்கரில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு விதமான பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
ஒரே நேரத்தில் 15,000 பேர் திருமணத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் உணவருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 750 சமையல் கலைஞர்களைக் கொண்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் உணவருந்தும் வகையில் 1,700 ஆடுகளைக் கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டுள்ளது.
இல்லத் திருமண நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.