தொண்டாமுத்தூர்: ஈஷா அறக்கட்டளை சார்பில், கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க, ஆண்டுதோறும், கிராமோத்சவம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, தென்மாநில அளவிலான, 15வது கிராமோத்சவ திருவிழா, கடந்த ஆக., முதல் துவங்கியது. இதில், சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.தென் மாநில அளவிலான இறுதி போட்டிகள், கோவை ஆதியோகி சிலை முன் இன்று நடக்கிறது. இறுதிபோட்டிகளில், வெற்றி பெறும் அணிகளுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர், பரிசுகளை வழங்க உள்ளனர்.வாலிபால் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு, 5 லட்சம் ரூபாயும், த்ரோபால் அணிக்கு, 2 லட்சம் ரூபாயும், ஆண்கள் கபடி அணிக்கு 5 லட்சம் ரூபாயும், பெண்கள் கபடி அணிக்கு இரண்டு லட்சம் ரூபாயும் என, பரிசு தொகைகளும், பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட உள்ளன.ஆண்களுக்கான வாலிபால் போட்டி, த்ரோபால் போட்டி, இருபாலருக்குமான கபடி போட்டிகள், காலை 9:00 முதல் 5:00 மணி வரை நடக்கிறது. இதில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய, 5 மாநிலங்கள், புதுச்சேரியில் இருந்து தேர்வாகியுள்ள அணியினர் மோத உள்ளனர். இப்போட்டிகளை காண, தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஈஷா வருகை தர உள்ளனர். பிரதான போட்டிகளை தவிர்த்து, பார்வையாளர்கள் பங்கேற்க, வழுக்கு மரம், உறியடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. இவ்விழாவில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.