சென்னை: “செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியாக நாங்கள் இதை சந்திப்போம்” என்று முதல்வர் பதில் தெரிவித்தார்.
‘ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?. அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.