கூகுள் மேப்பில் , இனி வாகனம் பயணிக்க இருக்கும் வழியில் உள்ள டோல்கேட் கட்டணத்தையும் கணக்கிட்டு சொல்லும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் மேப் என்பது, கூகுள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு செயலியாகும். .இந்த செயலி நிலப்படங்களை துல்லியமாக காட்டி வழி தேடுபவர்களுக்கு உற்ற நண்பனாக உள்ளது. உலகம் முழுவதையும் ஒரு செயலியில் பார்க்க முடியும் என்றால் அது கூகுள் மேப்பில் மட்டுமே முடியும். இதன் காரணமாக உலகம் முழுதும் கூகுள் மேப்பின் தேவை அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. கூகுள் மேப் வசதி வந்த பின்னர், மக்கள் உள்ளூர் வாசிகளிடம் விலாசம் கேட்பதில்லை. ஊர் பெயர் அறிந்திராத பகுதிகளுக்கு கூட அசால்டாகச் சென்று வர முடிகிறது என்றால், அதற்கு கூகுள் மேப்பின் மேம்பட்ட சேவைகள்தான் காரணம்.
பல்வேறு சேவைகளைத் தனது செயலி மூலம் வழங்கினாலும், அவ்வப்போது புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும். மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கவே பல அப்டேட்களை வழங்கி வருகிறது கூகுள் மேப். அந்த வகையில் இனி நாம் செல்லும் பகுதியில் எத்தனை சுங்க சாவடிகள் உள்ளது ? ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்ற மொத்த தகவலையும் அளிக்கும் புதிய சேவையை கூகுள் மேப் அறிமுகம் செய்ய உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் பாதையின் மொத்த டோல் கட்டணத்தையும் கணக்கிட்டு காட்டும் வகையில் இந்த சேவை அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மற்றுமொரு சிறப்பம்சமாக நாம் செல்லும் வழியில் டோல் கேட் இல்லாத மாற்றுப் பாதையையும் இதில் அறிய முடியும்.
இந்த சேவை முதற்கட்டமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வழங்கப்பட உள்ள நிலையில், வருங்காலங்களில் மேலும் பல நாடுகளில் கொண்டு வரப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல ஐ.ஓ.எஸ். பயனாளர்களுக்கு இனி ஆப்பிள் வாட்ச் மூலமே நேரடியாக கூகுள் மேப் பயன்படுத்த கூடிய புதிய சேவையும் கூகுள் மேப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.