நீங்கள் விண்டோஸ் யூஸராக இருந்து அதே நேரத்தில் கூகுள் குரோம் பிரவுசர் அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால் இருந்தால், இந்த செய்தி உங்களுக்காக தான். ஆரம்ப காலங்களில் இருந்தே கூகுள் குரோமும், மைக்ரோசாஃப்டும் இணை பிரியாத நண்பர்களாக இருந்து வருகின்றனர். 90% மக்கள் கூகிள் குரோமைதான் தங்களது, டீஃபால்ட் பிரவுசராக செலக்ட் செய்து வைத்துள்ளனர். மேலும் விண்டோஸ் சேர்ந்து தளத்தோடு வரும் அனைத்து கணினி மற்றும் லேப்டாப்புகளிலும் கூகுள் குரோம் சேர்ந்தே வந்தது. ஆனால் இனி விண்டோஸ் இன் சில வெர்ஷன்களுக்கு மட்டும் கூகுள் குரோமின் சப்போர்ட் இருக்காது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ் இன் குறிப்பிட்ட பழைய வெர்ஷன்களுக்கு மட்டுமே தன்னுடைய சப்போர்ட்டை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகியவற்றிற்கான சப்போர்ட்டை 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை பற்றிய அறிவிப்பு கூகுளின் அதிகாரப்பூர்வ வலை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் குரோம் 110 பதிப்பானது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை எதிர்பார்த்த நேரத்தில் இந்த கூகுள் குரோமின் புதிய வெர்ஷன் வெளிவரும் பட்சத்தில் இதுதான் மேலே கூறிய விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சப்போர்ட் செய்யும் கடைசி கூகுள் குரோம் வெர்ஷன் ஆக இருக்கும். அதன் பின் அறிமுகப்படுத்தப்படும் எந்த ஒரு கூகுள் குரோம் பிரவுசரும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 இயங்கு தளத்தில் இயங்காது.
மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 வெர்ஷனுக்காண புதிய அப்டேட்டுகள் மற்றும் சப்போர்ட்டை நிறுத்த போவதாக அறிவித்திருந்தது. அதனை பின்பற்றிய கூகுள் குரோம் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1-க்கான சப்போர்ட் அடுத்த வருடம் முதல் நிறுத்தப்படும். கூகுள் குரோம் 110 தான் இந்த இயங்குதளத்தில் இயங்கும்படி வெளிவரும் கடைசி கூகுள் பிரவுசராக இருக்கும். பிப்ரவரி 7, 2023 ஆம் தேதி கூகுள் குரோம் 110 சந்தைக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பில் கூகுள் தெரிவித்துள்ளது.
அதன்படி பார்த்தால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகியவை இனி சந்தையில் வரும் எந்த ஒரு அப்டேட்டுகளுக்கும் பொருத்தமானவை அல்ல என்றும் தற்போது நீங்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 பயன்படுத்துவராக இருந்தால் அவற்றை விண்டோஸின் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் புதிய வெர்ஷனுக்கு மாறவில்லை என்றால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகியவை உங்கள் கணினியில் இயங்கிக் கொண்டிருப்பதில் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் புதியதாக கிடைக்கும் செக்கியூரிட்டி அப்டேட்டுகள் மற்றும் புதிய வசதிகள் எதுவும் உங்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.