தங்க கட்டி வியாபாரிகள்சங்க தலைவர் வீடு – கடைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை

கோவையில் பெரிய கடைவீதி,ராஜவீதி, வைசியாள் வீதி, பொன்னையராஜபுரம், செல்வபுரம் பகுதியில் நகைப் பட்டறைகள் மற்றும் நகை கடைகள் அதிகம் உள்ளன. இதில் கோவை மாவட்ட தங்க கட்டி வியாபாரிகள் சங்கச் செயலாளரும், தென்னிந்திய தங்க கட்டி வியாபாரிகள் சங்க தலைவராகவும்பதவி வகித்து வருபவர் கார்த்திக் .இந்த நிலையில் நேற்று காலை 20 க்கு மேற்பட்ட ஜி.எஸ்.டி. சிறப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆர் .எஸ். புரத்தில் உள்ள கார்த்திக்கின் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடையில் இருந்தவர்களிடம் ஜி.எஸ்.டி. மோசடி தொடர்பாக சோதனை நடத்த வந்ததாக கூறி சோதனை நடத்தினர். அதுபோன்று அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேறு யாரையும் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. அது போல கடையிலிருந்து யாரையும் வெளியே விடவில்லை. கடைகள் மற்றும் வீட்டில் இருந்த அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது? எவ்வளவு ஜி.எஸ்.டி. ஏய்ப்பு நடந்துள்ளது என்பது குறித்த முழுவதும் தெரியவில்லை .இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது:- பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் கார்த்திக்கு சொந்தமான 2 நகைக்கடைகள் ,ஆர். எஸ். புரத்தில் உள்ள அவரது வீடு ஆகிய 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் தான் முழு தகவல் தெரிய வரும் என்றனர். தங்க கட்டி வியாபாரியின் வீடு மற்றும் கடைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள்நடத்திய சோதனை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.