வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விநாயகர்… கண்டு களித்த பொதுமக்கள்..!

சத்தியமங்கலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 46 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதியில் இருந்து டிராக்டர்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ரங்கசமுத்திரம், புதிய பஸ் நிலையம், ஆற்று ப்பாலம், சின்ன ரோடு கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, சத்யா தியேட்டர், வரதம்பாளையம் மற்றும் வடக்குப்பேட்டை வழியாக சென்றடைந்த பின் திப்புசுல்தான் சாலையில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஊர்வலம் அத்தாணி சாலை வழியாக பவானி ஆற்றை நோக்கி சென்றது. ஆற்றுப்பாலம் அருகே ஆற்றங்கரையைச் சென்றடைந்தவுடன் இரவில் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..