டெல்லி : நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கான சுரங்கப் பாதைகள் அசாமின் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்பட உள்ளது.
நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் எல்லையோர சாலைகளுக்கான துறைகள் இணைந்து சுமார் ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். பாதுகாப்புத் துறை சார்பிலும் நீருக்கடியிலான சுரங்கப் பாதைக்கு நிதி வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.
வடக்கு அசாம் மற்றும் அருணாச்சலத்தை இணைக்கும் வகையில் உருவாகும் இந்த திட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் 9.8 கிமீ தொலைவிற்கு 3 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. 2 சுரங்கப் பாதைகளில் கனரக வாகனங்களுக்கான பொது போக்குவரத்தும் மற்றொரு வழித்தடம் ரயில் பாதையாகவும் அமைய உள்ளது. தற்போது பிரம்மபுத்திரா நதியில் நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலை பாலம் உட்பட 5 பாலங்கள் உள்ளன. நீருக்கடியிலான சுரங்கப் பாதை பயணத்தை மேலும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.